வெளிநாட்டினரை கணக்கெடுக்கச் சொன்ன கர்நாடக அமைச்சர்... திடீர் உத்தரவு ஏன்?

விசா காலம் முடிந்து தங்கியிருக்கும் வெளிநாட்டு குடிமக்கள் மற்றும் சரியான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பவர்களைக் கண்டறிவதற்காக இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

வெளிநாட்டினரை கணக்கெடுக்கச் சொன்ன கர்நாடக அமைச்சர்... திடீர் உத்தரவு ஏன்?

கர்நாடகா உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, தட்சிண கன்னடா மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் குறித்து காவல் நிலைய அளவிலான கணக்கெடுப்பு நடத்துமாறு தட்சிண கன்னடா மாவட்ட காவல்துறை மற்றும் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

விசா காலம் முடிந்து தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் சரியான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பவர்களைக் கண்டறிவதற்காக இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வெளிநாட்டினர் போலி ஆதார் அட்டைகள், ரேஷன் கார்டுகள் அல்லது வாக்காளர் அடையாள அட்டைகள் ஆகியவற்றைப் பெற்றுள்ளனரா என்பதை போலீஸார் கண்டறிய வேண்டும் என்றார் அமைச்சர்.

இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

கடந்த திங்கள்கிழமை மாலை தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகளுடனான கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர், ஞானேந்திரா செய்தியாளர்களிடம் கூறுகையில், சமீபத்தில் பெங்களூருவில் இதேபோன்ற ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.

தட்சிண கன்னடாவில் சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக உள்ளது என்றார். பல வழக்குகளில் சாட்சிகள் விரோதமாக மாறுவதால் மாவட்டத்தில் தண்டனை விகிதம் குறைவாக உள்ளதால், இதுபோன்ற வழக்குகளை திறம்பட கையாள, அரசு வழக்கறிஞர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மேற்குப் பிராந்திய ஐஜி தேவஜோதி ரே, மங்களூரு நகர போலீஸ் ஆணையர் சஷி குமார், தட்சிண கன்னடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹிருஷிகேஷ் பகவான் சோனாவனே ஆகியோர் கலந்து கொண்டனர்.

- ஜோஸ்