மனைவியின் உடலை மூட்டையில் தூக்கிச்சென்ற கணவர்...

இறந்த மனைவியின் ஈம சடங்கு செய்ய காசில்லாமல், உடலை ப்ளாஸ்டிக் மூட்டையில் கணவன் கொண்டு சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.

மனைவியின் உடலை மூட்டையில் தூக்கிச்சென்ற கணவர்...

கர்நாடகா | சாம்ராஜ் நகர் மாவட்டம் எலந்தூர் நகரில் நேற்று காலை ரவி என்ற 32 வயது நபர் சந்தேகப்படும் விதத்தில் தோளில் பெரிய மூட்டையை சுமந்து சென்று கொண்டிருந்தார். உடனடியாக பொதுமக்கள் சிலர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க, அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அந்த மூட்டையை சோதனை செய்தனர்.

அப்போது அதில் பெண் சடலம் காணப்பட்டது. உடனே ரவியிடம் விசாரித்ததில், அது தன் மனைவி காலம்மா என்றும், வயது 26 என்றும் தெரியவந்துள்ளது. மேலும், தாங்கள் வீடு இல்லாமல் ஊர் ஊராக சுற்றி சாலைகளில் வசித்து வரும் நிலையில், இன்று காலை தனது மனைவி உயிரிழந்துள்ளார். அதனால், அவரை அடக்கம் செய்ய நதிக்கரை ஓரத்திற்கு எடுத்து செல்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | பிரபல நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி மறைவு..!

ரவி மற்றும் காலம்மா ஆகிய இருவரும் மண்டியா மாவட்டம் மாலவள்ளி தாலுக்காவில் உள்ள காகேபுரா கிராமத்தை சேர்ந்தவர்கள். பெற்றோர்கள், உறவினர்கள், குழந்தைகள் என யாரும் இல்லாத நிலையில் இருவரும் ஊர் ஊராக சென்று சாலையில் உள்ள பழைய பொருட்களை எடுத்து விற்று சாலை ஓரமாகவே வசித்து வந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, இருவருக்கும் அதீத மது பழக்கம் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 6) இரவு இருவரும் அன்று கிடைத்த பணத்தில் அதீதமாக மது அருந்திவிட்டு சாலை ஓரத்தில் உள்ள ஒரு சிறு குடிசையில் படுத்து உறங்கி உள்ளனர். பின், புதன்கிழமை (டிசம்பர் 7) காலை காலம்மா உயிர் இழந்த நிலையில் கையில் பணம் இல்லாமல் அவரை தானே அடக்கம் செய்ய ரவி உடலை மூட்டை கட்டி எடுத்துச் சென்றுள்ளார்.

மேலும் படிக்க | மூளைச்சாவு அடைந்த இளைஞாின் உறுப்புகள் தானம்...

எலந்தூர் காவல் நிலையத்தில் காலம்மா உயிரிழப்பு குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உரிய விசாரணை நடத்திய பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்பு நேற்று இரவு காவல்துறையினர் அவர்களது சொந்த பணத்தில் இந்து முறைப்படி ரவியுடன் காலம்மா உடலை தகனம் செய்தனர்.

அவரது உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு ரவிக்கு சிறிய அளவு பண உதவி செய்து காவல்துறையினர் அவரை சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க | மாணவர்கள் படிப்பு மட்டுமல்லாமல் மன நலன்‌ - உடல் நலன் காப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர்