இந்தியாவின் ஒரு பகுதியான லட்சத்தீவுக்குள் நுழைய இந்திய எம்.பிக்களுக்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய யூனியன் பிரதேசமான லட்சத் தீவில் சுமார் 66 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அவர்களில் 95 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். மத்திய அரசின் சார்பில் லட்சத் தீவின் தலைமை நிர்வாக அதிகாரியாக பாஜக-வை சேர்ந்த பிரபுல் கோடா படேல் கடந்த ஜனவரியில் நியமிக்கப்பட்டார். அந்த நியமனத்தை தொடர்ந்து பசு வதை தடுப்பு சட்டம், கடலோர பாதுகாப்பு சட்டம், சமூக விரோத தடுப்பு சட்டம் போன்ற சர்ச்சைக்குரிய சட்டங்களை தலைமை நிர்வாக அதிகாரி பிரபுல் கோடா படேல் லட்சத்தீவில் அமல்படுத்தி வருகிறார்.
இதற்கு கேரளா ஆளும் அரசு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் லட்சத்தீவுக்கு செல்ல இடது ஜனநாயக முன்னணி எம்.பி.கள் எலாமரம் கரீம், வி.சிவதசன், ஏ.எம். ஆரிஃப், பினாய் விஸ்வம், எம்.வி.ஸ்ரேயாம் குமார், கே சோமபிரசாத், தாமஸ் சாஜிகதன் மற்றும் ஜான் பிரிட்டாஸ் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் இந்த விண்ணப்பமானது லட்சத்தீவு நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் காங்கிரஸ் எம்.பிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.