மக்கள் மனம் கவர்ந்த யானை லட்சுமியின் மறைவு..! கதறி அழுத பாகன் சக்திவேல்

மணக்குள விநாயகர் கோயில் யானையின் உடலுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை.
லட்சுமி:
கடந்த 1997-ஆம் ஆண்டு 6 வயதாக இருக்கும் போது லட்சுமி என்ற பெண் யானை, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த யானை அன்றுமுதல் இன்றுவரை கோயிலுக்கு வரும் பக்தர்கள், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் அன்புக்கு பாத்திரமாக இருந்து வந்தது. மேலும், தந்தத்துடன் கூடிய லட்சுமி யானை, காலில் கொலுசு அணிந்தும், நெற்றிப் பட்டம் அணிந்தும் ஆசி வழங்கும் அழகே தனிதான்.
மரியாதை:
இந்நிலையில், காமாட்சி அம்மன் கோயில் வீதியில் வழக்கம்போல் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்த லட்சுமி சம்பவ இடத்திலே உயிரிழந்தது. இதனால், சோகத்தில் ஆழ்ந்த பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் யானை லட்சுமியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாகன் சக்திவேல் கதறி அழுத காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்தது.
அனைத்து வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு:
தகவல் அறிந்து வந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் லட்சுமி யானையின் உடலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், லட்சுமி யானையின் இழப்பு அனைத்து வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு போன்றது என தெரிவித்துள்ளார்.