அமைதியான கோரிக்கை அல்ல... பிடிவாதமான கோரிக்கை...

அமைதியான கோரிக்கை அல்ல... பிடிவாதமான கோரிக்கை...

2012 ஆம் ஆண்டில், பாரதிய ஜனதா கட்சியின்  தலைவரும் வழக்கறிஞருமான சுப்பிரமணியன் சுவாமி, யங் இந்தியன் லிமிடெட் நிறுவனத்தால் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தை கையகப்படுத்துவதில் காங்கிரஸ் தலைவர்கள் ஏமாற்றுவதாகவும் நம்பிக்கையை மீறுவதாகவும் குற்றஞ்சாட்டி  நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார். நேஷனல் ஹெரால்டின் சொத்துக்களை ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி இருவரும் கையகப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.  நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணையில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

நேஷனல் ஹெரால்டு:
 
நேஷனல் ஹெரால்டு 1938 இல் ஜவஹர்லால் நேரு பிற சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் இணைந்து நிறுவினார். இது இந்திய தேசிய காங்கிரஸின் கருத்துகளை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது. அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்  மூலம் வெளியிடப்பட்ட இந்த செய்தித்தாள் சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் ஊதுகுழலாக மாறியது. அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் ஹிந்தி மற்றும் உருது மொழிகளிலும் மேலும் இரண்டு செய்தித்தாள்களை வெளியிட்டது. 2008ல் ஏற்பட்ட 90 கோடி ரூபாய் கடனால் செய்தித்தாள் நிறுத்தப்பட்டது.

அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்:
 
அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்  ஜவஹர்லால் நேருவின் சிந்தனையில் உருவானது. 1937 இல், நேரு 5,000 சுதந்திரப் போராட்ட வீரர்களை அதன் பங்குதாரர்களாக கொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். நிறுவனம் குறிப்பிட்ட எந்த நபருக்கும் சொந்தமானது அல்ல. 2010 இல், நிறுவனம் 1,057 பங்குதாரர்களைக் கொண்டிருந்தது. இந்நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்ததால் அதன் பங்குகள் 2011 இல் யங் இந்தியாவுக்கு மாற்றப்பட்டது.

யங் இந்தியா லிமிடெட்:
 
யங் இந்தியா லிமிடெட் 2010 இல் நிறுவப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ராகுல் காந்தி அதன் இயக்குநராக இருந்தார். நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் வைத்திருந்தனர். மீதமுள்ள 24% காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோருக்கு சொந்தமானது. 

அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் பங்குதாரர்களின் குற்றச்சாட்டு:
 
முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன், அலகாபாத் மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு உட்பட பலர் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் பங்குதாரர்கள், யங் இந்தியா லிமிடெட், 
அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் ஐ கையகப்படுத்தியபோது தங்களுக்கு எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை என கூறியுள்ளனர்.  அவர்களின் தந்தைகள் வைத்திருந்த பங்குகள் அவர்களின் சம்மதம் இல்லாமலே 2010 இல் யங் இந்தியா லிமிடெட்  க்கு மாற்றப்பட்டது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ள பெயர்கள்:
 
சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ், பத்திரிக்கையாளர் சுமன் துபே, தொழில்நுட்ப வல்லுநர் சாம் பிட்ரோடா ஆகியோருடைய பெயர்கள் சுவாமியின் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு விளக்கம்:
 
2,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை பெறுவதற்காக, செயலிழந்த அச்சு ஊடகத்தின் சொத்துக்களைத் தவறான வழிமுறையில் யங் இந்தியா லிமிடெட் கையகப்படுத்தியது என்று சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்துள்ளார்.
 
இந்த வழக்கில் பணமோசடி நடந்துள்ளதா என 2014ல் அமலாக்க துறை விசாரணை நடத்தியது. 18 செப்டம்பர் 2015 அன்று, நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்க துறை தனது விசாரணையை மீண்டும் தொடங்கியதாகத் தெரிவித்தது.

குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் பதில்:

யங் இந்தியா லிமிடெட் அமைப்பு தொண்டு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே தவிர எந்த இலாப நோக்கத்திற்காகவும் அல்ல என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. நிறுவனத்தின் பங்குகளை மாற்றுவதற்கான  வணிக பரிவர்த்தனையில் எந்தவித சட்ட விரோதமும்"இல்லை என்றும் அது கூறியுள்ளது. அரசியல் உள்நோக்கம் காரணமாகவே சுவாமி வழக்கு தொடுத்துள்ளதாக ஆட்சேபனை கூறியுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு இதுவரை:


 
2015 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் விரைவான விசாரணைக்கு ஒரு வழக்கைத் தாக்கல் செய்யுமாறு சுவாமியிடம் கேட்டுக் கொண்டது. இந்த வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு டிசம்பர் 19, 2015 அன்று  நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 2016 ஆம் ஆண்டில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் (காந்திகள், மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ் மற்றும் சுமன் துபே) உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்தது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்க துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ரவி சங்கர் பிரசாத் விமர்சனம்:

சோனியா காந்தி இன்று அமலாக்கதுறைக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்களும் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.  இதனையடுத்து விசாரணை நடந்து வரும் அதே வேளையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் நடத்தி வருவது சத்தியாகிரக முறையிலான கோரிக்கை இல்லை எனவும் பிடிவாதமான கோரிக்கை எனவும் விமர்சித்துள்ளார் பாஜகவின் முன்னாள் சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.  மேலும் அவர் நாடாளுமன்றத்தை புறக்கணித்து விட்டு நடத்தும் போராட்டம் மக்களுக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.