பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதி மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் காண்வாய் சுமார் 20 நிமிடங்கள் வரை நின்ற சம்பவம், நாட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த பாதுகாப்பு குளறுபடி காரணமாக, பஞ்சாப்பில் பிரதமர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க, 3 பேர் கொண்ட குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. கேபினட் செயலகத்தின் செயலாளர் ஸ்ரீ சுதிர் குமார் சக்சேனா தலைமையில் இணை இயக்குநர் ஸ்ரீ பல்பீர் சிங், எஸ்.பி.ஜி. ஐ.ஜி. ஸ்ரீ எஸ். சுரேஷ் ஆகியோர் குழுவில் உள்ளனர். 3 பேர் கொண்ட குழு தீவிரமாக விசாரித்து, விரைவில் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக விரிவான விசாரணை கோரி, மூத்த வழக்கறிஞர் மன்விந்தர் சிங் மனு தாக்கல் செய்துள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்படாத வகையில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும், இந்த சம்பவம் திட்டமிட்டு நடைபெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கின் விசாரணை, உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.