ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக  73% அமெரிக்கர்கள்,.! ஆய்வில் வெளிவந்த சுவாரசியத் தகவல்கள்,.! 

ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக  73% அமெரிக்கர்கள்,.! ஆய்வில் வெளிவந்த சுவாரசியத் தகவல்கள்,.! 
Published on
Updated on
2 min read

ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள் இருக்கிறார்கள் என்பது கேலப் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 

பல்வேறு மதங்கள் ஓரினச் சேர்க்கையை இயற்கைக்கு மாறானது என்றும், பாவத்திலும் மிகப் பெரிய பாவங்கள் என்றே சொல்லிவருகின்றன. இதன் காரணமாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட பல்லாயிரம் ஆண்களும்,பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் சமீபகாலமாக அறிவியலில் வளர்ச்சி காரணமாக ஓரினச் சேர்க்கை என்பது நோய் அல்ல என்பதும் அதுவும் இயற்கையிலேயே மனிதன் பிறக்கும் போதே வரும் சாதாரண பாலியல் உணர்வு என்று தற்போது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக ஓரினச் சேர்க்கை பற்றிய புரிதல் பொதுமக்களிடையே நாளுக்கு  நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பல்வேறு நாடுகள் ஓரினச் சேர்க்கையை அங்கீகரித்துள்ள நிலையில் ஆண் ஆணோடும், பெண் பெண்ணோடும் சேர்ந்து வாழும் திருமண வாழ்க்கைக்கு பல்வேறு நாடுகள் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளன. 

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் தான் முதன் முறையாக ஓரினச் சேர்க்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு மாகாணங்களிலும் இதற்கு அனுமதி வழங்கப்பட்டாலும் அமெரிக்காவின் 14 மாகாணங்களில் ஓரினச் சேர்க்கைக்கு தடை இருந்தது. இதை எதிர்த்து அமெரிக்காவில் வாழும் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஒன்றுசேர்ந்து அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து வாழ எந்த தடையும் இல்லை என்றும், அவர்கள் திருமணத்திற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கியும் கடந்த 2015ம் ஆண்டு தீர்ப்பளித்தனர். இது உலகம் முழுவதும் வாழும் ஓரினச் சேர்க்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 

அதைத் தொடர்ந்து கேலப் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் 73 % அமெரிக்கர்கள் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இதில் இளைஞர்கள் 84% பேரும், நடுத்தர வயதினர் 72% பேரும், வயதானவர்கள் 60% பேரும் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று ம் கூறப்பட்டுள்ளது. இதே நிறுவனம் 1996 இல் நடத்திய ஆய்வில் 73% பேர் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள் என்றும் கூறியுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்கும் படி டெல்லி உயர்நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்," ஒரே பாலின திருமணத்தை தனிநபர் சுதந்திரம் என்ற வரையறைக்குள் கொண்டுவர முடியாது. இதை இந்திய குடும்ப முறையுடன் ஒப்பிட முடியாது. இந்த திருமணங்களை அங்கீகரிப்பது ஏற்கனவே இருக்கும் சட்டங்களை மீறுவதாகவும். இந்த திருமணத்தில் யார் கணவர்,? யார் மனைவி,? என்பதை எப்படி முடிவு செய்வது? இந்த திருமணத்தை அங்கீகரித்தால் நாட்டில் மிகப் பெரிய குழப்பம் ஏற்படும். ஆகவே இதை அங்கீகரிக்க முடியாது "என்று ஒன்றிய அரசு பதில் கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனால்  "ஓரினச்சேர்க்கை சட்ட விரோதமானதல்ல"  என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com