குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கொடிய நோயா டைப் 1 நீரிழிவு - மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்

டைப் ஒன்று நீரிழிவு நோய் குறித்து மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்.
குடுபத்துடன் தற்கொலை:
சேலத்தில் பிறவியிலேயே டைப் ஒன்று நீரிழிவு நோயால் பாதித்த குழந்தைகளை ஆற்றில் வீசி கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த நோய் குறித்து சிவகங்கை பொது நல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.
ஃபரூக் அப்துல்லா:
இது குறித்து டாக்டர் ஃபரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில், பிறவியிலேயே டைப் ஒன்று நீரிழிவு குறைபாட்டுடன் பிறந்த தனது இரண்டு குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்து விட்டு மனைவியுடன் தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் தந்தை.
விழிப்புணர்வு:
இந்த நாள் இப்படிப்பட்ட செய்தியைத் தாங்கி வருவது மனதை ரணம் செய்கிறது. குழந்தைகளை ஆற்றில் வீசிக் கொல்லவும் தாங்கள் தற்கொலை செய்து தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ளவும் இந்த குடும்பத்திற்கான காரணமாக டைப் ஒன்று நீரிழிவு அமைந்துவிட்டதே என எண்ணும் போது இன்னுமின்னும் விழிப்புணர்வை அதிகமாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பது புரிகிறது.
இதையும் படிக்க: பேரீச்சம்பழத்தில் இரும்பு சத்து இல்லை - அரசு மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
டைப் ஒன்று நீரிழிவு:
டைப் ஒன்று நீரிழிவு என்பது மரபணுக்கள் வழி வரலாம், வைரஸ் தொற்று/காய்ச்சல் ஏற்படுவதால் வரலாம், கணையத்தை தாக்கும் பிரச்சனைகளால் வரலாம். டைப் டூ டயாபடிஸ் மக்களுக்கு கணையத்தின் பீட்டா செல்களில் பெரும்பகுதி அழிந்தாலோ செயல்பட மறுத்தாலோ டைப் ஒன்றாக அவர்களும் மாறலாம். இப்படியாக டைப் ஒன்று டயாபடிஸ் வந்து விட்டதால் வாழ்க்கையே முடிந்து விடுவதில்லை.
கட்டுப்படுத்துதல்:
அன்றாடம் முறையாக இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதன் மூலமும் உணவுக் கட்டுப்பாடுகளின் மூலம் டைப் ஒன்று நீரிழிவை சிறப்பாக கட்டுக்குள் வைக்க முடியும். டைப் ஒன்று நீரிழிவு உள்ளவர்களால் திருமண உறவில் சாதாரண மக்கள் போல இணைய முடியும். தாம்பத்தியத்தில் ஈடுபட முடியும். குழந்தைகள் பெற்றுக் கொள்ள முடியும். அவர்கள் வாழ்வில் சிறப்பான எதிர்காலத்தை அடைய முடியும்.
தெரசா மே:
டைப் ஒன்று நீரிழிவுடன் சிறந்த எதிர்காலத்தை அடைய முடியும். ஒன்றுபட்ட பிரிட்டன் முடியரசின் இரண்டாவது பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட தெரசா மே அவர்கள் டைப் ஒன்று குறைபாடு கொண்டவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சில் சாதனையாளரான வாசிம் அக்ரம் டைப் ஒன்று குறைபாடு கொண்டவர். இப்படி பல்வேறு உதாரணங்களைக் கூற முடியும். டைப் ஒன்று டயாபடிஸ் நோயர்கள் மற்ற மாணவர்களைப் போல கற்க முடியும்.
இலவசம்:
நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். கல்வியிலும் விளையாட்டிலும் ஏனைய துறைகளிலும் சாதிக்க முடியும். தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் இன்சுலின் எனும் உயிர் காக்கும் மருந்து இலவசமாக வழங்கப்படுகின்றன. எனவே டைப் ஒன்று நோயாளிகள் செலவினம் குறித்தும் அச்சப்படத் தேவையில்லை. அவர்களுக்கான க்ளூகோஸ் ரத்தப்பரிசோதனைகள், சிறுநீரக, கண் பரிசோதனைகள் அனைத்தும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகச் செய்யப்படுகின்றன.
முடிவல்ல அது தொடக்கம்:
முறையான மருத்துவக் கண்காணிப்பில் இருந்து ரத்த க்ளூகோஸ் அளவுகளை கட்டுக்குள் வைக்க இன்சுலினை சரியாக போட்டுக் கொண்டு அவரவர் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியும். டைப் ஒன்று என்பது முடிவல்ல அது தொடக்கம், வளமான வாழ்விற்கான தொடக்கம். விழிப்புணர்வு கொண்டு அனைவரையும் விழிப்புணர்வடையச் செய்வோம்.
உதவி எண்:
டைப் ஒன்றால் நமது வீட்டில் நமது குடும்பத்தில் நமது சுற்றத்தில் யார் பாதிப்புக்குள்ளானாலும் சரி அவர்களுக்கு ஒத்திசைவு செய்து அனுசரணை பாராட்டி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமை டைப் ஒன்றால் உயிர்கள் போவதை விடவும் அது குறித்த விழிப்புணர்வின்மையால் உயிர்கள் போவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக "மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம் என பதிவிட்டுள்ளார் ஃபரூக் அப்துல்லா.