12 இந்திய நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம்..!

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், சென்னை, தூத்துக்குடி, மும்பை உள்ளிட்ட 12 இந்திய கடலோர நகரங்கள், நீருக்குள் மூழ்கும் என்ற அதிர்ச்சிகரமான தகவலை ஐ.நா. ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 

12 இந்திய நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம்..!

காலநிலை மாற்றத்தின் காரணமாக, உலக நாடுகள் தொடர்ச்சியாக பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. வெப்பநிலை அதிகரிப்பினால் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால், ஆசிய நாடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் மழை மற்றும்  புயல்களை எதிர்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஐ. நா. சபையின் காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழுவான ஐ.பி.சி.சி. தனது ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இந்த அறிக்கையில், இந்தியாவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காலநிலை மாற்றத்தின் காரணமாக வானிலை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளில், கணிக்க முடியாத மாற்றங்களை இந்தியா சந்தித்து வருகிறது. இந்த நிலையில், நடப்பு நூற்றாண்டின் இறுதிக்குள், அதாவது 2 ஆயிரத்து 100-ஆம் ஆண்டிற்குள் இந்திய கடலோரப் பகுதிகளில் கடல் நீர் மட்டம் 3 அடி  உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மும்பை, சென்னை, தூத்துக்குடி, கொச்சி, மங்களூர், விசாகப்பட்டினம், பாரதீப், பவுநகர், காண்ட்லா, ஓகா, மோர்முகாவோ மற்றும் கிதிர்பூர் ஆகிய 12 இந்திய கடலோர நகரங்கள் கடல் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக, இந்த ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. மேலும், தற்போது வெளியேற்றப்படும் கார்பன் அளவை குறைத்தாலும் கூட, கடல் மட்டம் உயர்வதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.