மருத்துவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்க: அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மருத்துவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்க:  அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை

நாடு முழுவதும் மருத்துவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து, இன்று இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் புற மற்றும் உள் நோயாளிகள்  கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.

இந்த நிலையில்  மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் லவ் அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் சுகாதார பணியாளர்கள் நமக்கு அரியவகை பொக்கிஷம் என்றும், சமீபத்தில் அசாம், கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவர்கள் மீது உடல் ரீதியாக நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வரும் சுகாதார பணியாளர்கள் மீது அரங்கேற்றப்படும் தாக்குதல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை என்று குறிப்பிட்ட அவர், மருத்துவர்களின் பாதுகாப்பு மற்றும் நல் வாழ்வுக்கு தேவையான நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்  உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.