கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல்...

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஐரோப்பிய  நாடுகள் ஒப்புதல்...

ஐரோப்பிய மருத்துவ அமைப்பு இதுவரை, பைசர், மாடர்னா, அஸ்ட்ராஜெனிகா மற்றும் ஜான்சன் & ஜான்சன்  உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த தடுப்பூசியை செலுத்தி கொண்டு, பாஸ்போர்ட்டில் இணைத்தவர்கள் மட்டுமே, கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் தடையின்றி சென்று வர முடியும். மற்ற தடுப்பூசியை செலுத்தியவர்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றால், குறிப்பிட்ட காலம் தனிமைபடுத்தப்ப்டட பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு ஐரோப்பிய மருத்துவ அமைப்பு அனுமதி கிடைக்கவில்லை. இருப்பினும், மற்ற தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்வது குறித்து சம்பந்தப்பட்ட ஐரோப்பிய நாடுகள் தனிப்பட்ட முறையில் முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி சான்றிதழை ஏற்காமல், இந்திய பயணிகளை தனிமைப்படுத்தினால், அவர்களின் சான்றையும் ஏற்காமல், ஐரோப்பியர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபடும் என வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய யூனியனின் அனுமதி கேட்டு அஸ்ட்ரெஜெனகா வாயிலாக சீரம் நிறுவனம் விண்ணிப்பிதிருந்தது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து தான் கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு சில வாரங்களில் ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கிவிடும் என சீரம் நிறுவனத்தின் அடார் பூனவாலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு, ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்லோவேனியா, கிரீஸ், எஸ்டோனியா, ஐயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஒப்புதல் வழங்கி உள்ளன. மேலும் ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளும், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.