ஆரோக்கியமான விவாதங்கள் நடத்துவதற்கு அரசு தயார்-பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் நடத்துவதற்கு அரசு தயாராக இருப்பதாகவும், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாகவும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான விவாதங்கள் நடத்துவதற்கு அரசு தயார்-பிரதமர் மோடி

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. 33 கட்சிகளைச் சேர்ந்த 40 தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், இரு அவைகளின் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்றத்தில் பல்வேறு விவகாரங்கள், பிரச்னைகள் குறித்து விதிமுறைப்படி, ஆரோக்கியமான, அர்த்தமுள்ள விவாதங்களை நடத்த அரசு தயாராக இருப்பதாக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் பிரதமர் மோடி பேசியதாக தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளும், அறிவுரைகளும் வரவேற்கப்படுவதாக பிரதமர் மோடி பேசியதாகவும், அது சரியாக இருக்கும் பட்சத்தில் மத்திய அரசு பரிசீலிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். எனினும் மழைக்கால கூட்டத்தொடரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கொரோனா 2வது அலையை மத்திய அரசு கையாண்ட விதம், தடுப்பூசி பற்றாக்குறை, தேசதுரோக சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் கருத்து , விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.