ராஜா சிங்கிற்கு  எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம்  :  ஹைதராபாத்தில் கூடுதல் போலீசார் குவிப்பு !!

நபிகள் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங்கிற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ராஜா சிங்கிற்கு  எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம்  :  ஹைதராபாத்தில் கூடுதல் போலீசார் குவிப்பு !!

தெலுங்கானாவில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங், நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் விடியோ வெளியிட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவரை, கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து பாஜக நடவடிக்கை எடுத்தது.

தொடர்ந்து அவருக்கு உள்ளூா் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, பல்வேறு பகுதிகளில் இஸ்ஸாமிய அமைப்புகளை சேர்ந்தோர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நகரின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் கருப்பு கொடி ஏந்தியும், ராஜா சிங்கின் உருவ பொம்மைகளை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஏ. ஐ.எம். ஐ.எம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினரின் கருத்து உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியா்களை புண்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை தெரிவித்துள்ளது. மேலும், பாஜக சட்டமன்ற உறுப்பினர் மீது இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது...