வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி...

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி பேரணி நடத்தினர்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19-ம் தேதி தொடங்கியதில் இருந்து பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் விவகாரம் ஆகியவற்றை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் இரு அவைகளும் சரியாக நடைபெறாமல் நாள்தோறும் முடக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி மாநிலங்களவையில் எதிர்கட்சி எம்.பிக்கள் சட்டபுத்தகத்தை தூக்கி எறித்தும் மேஜையின் மீது ஏறியும் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.
 
எதிர்கட்சிகளின் நடவடிக்கையால் நாடாளுமன்றத்தின் மாண்பு குலைக்கப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியது. இதேநிலை மக்களவையிலும் நீடித்தது. நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் எதிர்கட்சிகளின் அமளியால் மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஓம் பிர்லாவை அவரது அறையில் முக்கிய கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசினர்.  
 
இந்தநிலையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற கோரி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட 15 எதிர்கட்சிகளின் பிரதிநிதிகள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். ராகுல் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் திமுக, திரிணாமுல், சிவசேனா உள்ளிட்ட பிரதான எதிர்கட்சிகளின் எம்.பி-கள் பங்கேற்றனர். 
 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளை பேச அனுமதிக்காததால் மக்களை சந்திக்க வந்துள்ளதாக கூறினார். எதிர்கட்சிகளை பேச அனுமதிக்காததன் மூலம் மத்திய அரசு ஜனநாயக படுகொலை செய்துவிட்டதாகவும் சாடினார்.
 
செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி திருச்சி சிவா, எந்தவித விவாதமும் இன்றி மத்திய பாஜக அரசு 35 மசோதக்களை நிறைவேற்றியிருப்பதாக குற்றம்சாட்டிய அவர், நாடாளுமன்றம் முடங்கியதற்கு ஆளும் கட்சியே காரணம் எனவும் சாடினார்.