கர்ப்பிணி பெண்களும் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்: ஐ.சி.எம்.ஆர் அறிவிப்பு...

கர்ப்பிணி பெண்களும் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்: ஐ.சி.எம்.ஆர் அறிவிப்பு...

நாடு முழுவதும் உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்று வகை பரவி வருவது குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த ஐ.சி.எம்.ஆர் பொது இயக்குனர் பல்ராம் பார்கவா, டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, மேற்குவங்கம், ஆந்திரா, அரியானா உள்ளிட்ட 8 மாநிலங்களில்  உருமாற்றம் பெற்ற டெல்டா வகை கொரோனாவின் பாதிப்பு 50 சதவீதத்திற்கு மேலாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 உலகம் முழுவதும் 12 நாடுகளில் டெல்டா பிளஸ் வகை கொரோனா பரவியுள்ளதாக தெரிவித்த ஐசிஎம்ஆர் இயக்குனர், இந்த தொற்றால் இந்தியாவில் இதுவரை 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில்  9 பேர்  கொரோனா டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 இதை தொடர்ந்து பேசிய அவர், கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளதாகவும், அதனைக் கொண்டு கர்ப்பிணி பெண்களும் இனிமேல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்து விளக்கம் அளித்த அவர், இதுவரை இந்த நடைமுறை ஒரு நாட்டில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளதாகவும், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து கூடுதல் பரிசோதனை தேவை என்றும் தெரிவித்தார்.