AI மூலம் இயக்கப்படும் பாதுகாப்பு தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளார்...மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், AI மூலம் இயக்கப்படும் புதிதாக உருவாக்கப்பட்ட 75 பாதுகாப்பு தயாரிப்புகளை ஜூலை 11ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் அறிமுகப்படுத்த உள்ளார்.

AI மூலம் இயக்கப்படும் பாதுகாப்பு தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளார்...மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..!

பாதுகாப்பு துறை அமைச்சகத்தின், பாதுகாப்பு உற்பத்தி துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, ' பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவு' (Artificial Intelligence in Defence) என்ற பெயரில் முதல் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஜூலை 11ம் தேதி அன்று, டெல்லியில் உள்ள விக்யான் பவனில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறை, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களால் உருவாக்காட்ட AI மூலம் இயக்கப்படும் அதிநவீன தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். இதுகுறித்து பேசிய, பாதுகாப்புச் செயலாளர் அஜய் குமார், சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளைக் குறிக்கும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பாதுகாப்புத் துறையில் பயன்படும்   AI தயாரிப்புகள்/தொழில்நுட்பங்களால் புதிதாக உருவாக்கப்பட்ட 75 தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் ஒரு பெரிய நிகழ்வாக இருக்கும் என கூறினார். மேலும் பேசிய அவர், இந்த AI கருவிகளால் போரில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும் என்றும் இந்த தயாரிப்புகள் சோதிக்கப்பட்டு, விரைவில் நாட்டின் பாதுகாப்பில் பயன்படுத்தப்படும் எனவும் மேலும் ரோபாட்டிக்ஸ் அமைப்புகள், சைபர் பாதுகாப்பு, மனித நடத்தை பகுப்பாய்வு, அறிவார்ந்த கண்காணிப்பு அமைப்பு, தளவாடங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை, பேச்சு/குரல் பகுப்பாய்வு மற்றும் கணினி போன்றவற்றில் இந்த தயாரிப்புகள் பயன்படுகின்றன. நிகழ்வில் வெளியிடப்படும் 75 தயாரிப்புகளைத் தவிர, மேலும் 100 தயாரிப்புகள் வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் உள்ளன எனவும் கூறியுள்ளார். 

இந்த நிகழ்வில், பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த இரு சிறந்த பாதுகாப்பு ஏற்றுமதியாளர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. மேலும்,  கல்வியாளர்கள், மாணவர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகள் பங்கேற்ப்பதுடன், 'பாதுகாப்பில் AI ஐப் பயன்படுத்துதல்' மற்றும் 'பாதுகாப்பில் AI - தொழில் பார்வை' பற்றிய குழு விவாதங்கள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது