2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் 7ம் தேதி வரை இந்திய ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு 2 ஆயிரம் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில், செலவாணி மேலாண்மை நடவடிக்கைகளின் கீழ் அவற்றை திரும்பப் பெற்றுக் கொள்வதாக, கடந்த மே 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பெட்ரோல் விற்பனை நிலையங்கள், அரசு ஆம்னி பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படாது என முன்னதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் 2ம் தேதி நிலவரப்படி 93 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்தது.
இதையும் படிக்க : திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு!
இந்நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யவும் மாற்றிக் கொள்வதற்குமான காலக்கெடுவை அக்டோபர் 7ம் தேதி வரை இந்திய ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. புழக்கத்தில் இருந்த 96 சதவீதம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 8ம் தேதிக்கு மேல், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் 19 அலுவலங்களில் மட்டும் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை, நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.