15 கிலோமீட்டர் கடலில் நீச்சல் அடித்து சிறுவன் சாதனை...!!

15 கிலோமீட்டர் கடலில் நீச்சல் அடித்து சிறுவன் சாதனை...!!

3மணி நேரம் 18 நிமிடத்தில் 15 கிலோமீட்டர் தூரம் கடலில்  நீச்சல் அடித்து ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் ஆட்டிசம் குறைபாடுடைய சிறுவன் லக்க்ஷய்.

ஆட்டிசம் பாதிப்பு உள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக ஆட்டிசம் குறைபாடு உடைய 11 வயதான லக்க்ஷய் என்ற சிறுவன் நீலாங்கரை முதல் மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை வரை சுமார் 15 கிலோமீட்டர் தூரம்  மூன்று மணி நேரம்  18 நிமிடத்தில்  நீச்சல் அடித்து இலக்கை அடைந்து சாதனை படைத்தார். இந்தச் சாதனை ஆசிய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

சாதனை படைத்த  சிறுவனுக்கு அங்கிருந்த பயிற்சியாளர்கள், உறவினர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சாதனை மாணவனின் பயிற்சியாளர் சதீஷ்குமார், ஆட்டிசம் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளாலும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த முயற்சி  முன்னெடுக்கப்பட்டதாகவும் இந்தச் சாதனையை குறைவான நேரத்தில்  15 கிலோமீட்டர் தூரம் கடலில் நீந்தி கடந்த முதல் இளம் வயது நபராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனவும் கூறினார். மேலும், இந்தச் சாதனையை செய்வதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும்,  இது போன்ற குழந்தைகள் ஒரு வர பிரசாதம் என்றும் இது போன்ற  மாற்றுத்திறனாளி குழந்தைகளின் திறமைகளை வளர்த்தெடுக்க அனைவரும் முன்  வரவேண்டும் எனக் கூறினார்.