இறுதிகட்டத்தை எட்டிய சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் தொடர்.. வெற்றியாளருக்கு ரூ.2கோடி பரிசு..!

நிறைவு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கவுள்ளார்..!

இறுதிகட்டத்தை எட்டிய சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் தொடர்.. வெற்றியாளருக்கு ரூ.2கோடி பரிசு..!

சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி:

சென்னையில் முதல்முறையாக நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்றுவரும் சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில், செக்குடியரசின் இளம் வீராங்கனை லிண்டா ஃப்ரூவிர்டோவா - அர்ஜென்டினாவின் நாடியா பொடோரோஸ்காவை எதிர்கொண்டார்.

லிண்டா அபாரம்:

இப்போட்டியில் முதல் செட்டை 5-7 என்ற கணக்கில் இழந்த லிண்டா, பின்னர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-2, 6-4 என்ற கணக்கில் அடுத்த இரு செட்களையும் கைப்பற்றினார். 2 மணி நேரம் 53 நிமிடம் வரை நீடித்த இப்போட்டியில், 5-7, 6-2, 6-4 என்ற செட்ணக்கில் நாடியா பொடோரோஸ்காவை வீழ்த்தி லிண்டா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

காயத்தால் வெளியேறிய ஸ்வான்:

மற்றொரு ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில், போட்டியின் தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள போலந்தின் மக்டா லினெட் - பிரிட்டனின் கேட் ஸ்வான் மோதினர். போட்டி தொடங்கி 3-0 என்ற கணக்கில் லினெட் முன்னிலையில் இருந்த நிலையில், காயம் காரணமாக ஸ்வான் போட்டியிலிருந்து வெளியேறினார். இதனால், லினெட் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டார்.

ரூ.2கோடி பரிசு:

இதனை தொடர்ந்து இன்று நடைபெறும் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில், லிண்டா ஃப்ரூவிர்டோவா - மக்டா லினெட் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதில், மகுடம் சூடும் வீராங்கனைக்கு 2 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்படவுள்ளது. நிறைவு நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கவுள்ளார்.