செஸ் ஒலிம்பியாட் - 7வது சுற்றில் இந்தியா ஆதிக்கம்!!

செஸ் ஒலிம்பியாட் - 7வது சுற்றில் இந்தியா ஆதிக்கம்!!

44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 7வது சுற்றில் இந்திய ஓபன் பி அணியைச் சேர்ந்த தமிழக வீரர்கள் பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய A vs இந்திய C 

11 சுற்றுகளைக் கொண்ட உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 7வது சுற்று நேற்று நடைபெற்றது. இதில் ஓபன் பிரிவுகளில் முதல்முறையாக இந்திய A அணியும் இந்திய C அணியும் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய A அணி 3க்கு ஒன்று என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய C அணியை வீழ்த்தியது.

7 சுற்றுகளிலும் வெற்றிவாகை சூடிய தமிழக வீரர்கள்

மற்றொரு 7வது சுற்று ஆட்டத்தில் இந்திய ஓபன் B அணி கியூபாவை எதிர்கொண்டது. இதில், கருப்பு நிற காய்களுடன் விளையாடிய தமிழக வீரர் குகேஷ் 46வது நகர்த்தலில் கார்லோஸ் டேனியலை வீழ்த்தினார். இதன்மூலம், 7 சுற்றுகளிலும் வெற்றிவாகை சூடி குகேஷ் அசத்தினார். கருப்புநிற காய்களுடன் விளையாடிய மற்றொரு தமிழக வீரர் பிரக்ஞானந்தாவும், 41வது நகர்த்தலில் கியூபா வீரரை வென்றார்.

இந்திய ஓபன் B அணி - கியூபா அணி

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சரின் நிஹால், 52வது நகர்த்தலில் கியூபா வீரரை தோற்கடித்தார். கியூபாவின் ஓமரை எதிர்த்து இந்திய வீரர் அதிபன் விளையாடிய போட்டி சமனில் முடிந்தது. இதன்மூலம், மூன்றரைக்கு அரைப் புள்ளி என்ற கணக்கில் இந்திய ஓபன் B அணி கியூபா அணியை வென்றது.

இந்திய மகளிர் ஏ அணி

இதேபோல் மகளிர் 7வது சுற்று போட்டியில் இந்திய மகளிர் ஏ அணி வலிமைவாய்ந்த அஜர்பைஜான் அணியுடன் மோதியது. இதில், கருப்புநிற காய்களுடன் விளையாடிய இந்தியாவின் கொனெரு ஹம்பி, 45வது நகர்த்தலில் அஜர்பைஜான் வீராங்கனையிடம் தோல்வியை தழுவினார். இத்தொடரில் அவர் சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். மற்றொரு ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி, 72வது நகர்த்தலில் அஜர்பைஜான் வீராங்கனையை வீழ்த்தினார்.

இந்திய மகளிர் A அணி

வெள்ளைநிற காய்களுடன் விளையாடிய இந்தியாவின் தானியா சச்தேவும், 63 வது நகர்த்தலில் வெற்றிவாகை சூடினார். இந்திய வீராங்கனை ஹரிகா துரோணோவள்ளி விளையாடிய போட்டி சமனில் முடிந்தது. இதன்மூலம், வலிமை வாய்ந்த அஜர்பைஜன் அணியை இந்திய மகளிர் A அணி வீழ்த்தி அசத்தியுள்ளது. மற்றொரு 7வது சுற்று ஆட்டத்தில் இந்திய மகளிர் B அணி, கிரீஸ் அணியை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இந்திய மகளிர் B அணி கிரீஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.

இந்திய மகளிர் C அணி - ஸ்விட்சர்லாந்து அணி

இன்னொரு போட்டியில், இந்திய மகளிர் C அணியும் ஸ்விட்சர்லாந்து அணியும் மோதின. இதில், வெள்ளைநிற காய்களுடன் விளையாடிய இந்திய வீராங்கனை ஈஷா கரவாடே, 44வது நகர்த்தில் ஸ்விட்சர்லாந்து வீராங்கனையை வென்றார். கருப்புநிற காய்களுடன் விளையாடிய தமிழக வீராங்கனை நந்திதா, 51வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

பிரத்யுஷா மற்றும் விஷ்வா வஷ்ணவாலா ஆகியோரின் ஆட்டங்கள் சமனில் முடிய இந்திய மகளிர் C அணி 3க்கு 1 என்ற புள்ளி கணக்கில் ஸ்விட்சர்லாந்து அணியை வீழ்த்தியது.