டி20-யில் இரட்டை சதம்.. கிறிஸ் கெயிலை ஓரங்கட்டிய கான்வெல்.. இருந்தாலும் வரலாற்றில் இடமில்லை..!

அட்லாண்டா ஓபன் லீக் டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கான்வெல் இரட்டை சதம் அடித்து அதிரடி..!

டி20-யில் இரட்டை சதம்.. கிறிஸ் கெயிலை ஓரங்கட்டிய கான்வெல்.. இருந்தாலும் வரலாற்றில் இடமில்லை..!

கிரிக்கெட்:

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் நம்பர் ஒன் இடத்தில் இருக்கக் கூடிய விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். நமது நாட்டு வீரர்களை தாண்டி இந்த விளையாட்டில் மட்டும் தான் பிற நாட்டு வீரர்களையும் ரசிப்பது உண்டு. அப்படிப்பட்ட இந்த கிரிக்கெட்டில் ஒருநாள் தொடர், டி20, டெஸ்ட் தொடர் என பல வகை போட்டிகள் நடத்தப்படும். 

சதம் என்பதே குதிரை  கொம்பு:

அப்படி நடைபெறும் போட்டிகளில் சதம் அடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதிலும் சில சமயங்களில் இரட்டை சதம் அடித்த அதிரடி வீரர்களும் இங்குண்டு. குறிப்பாக டி20 தொடரை பொருத்தவரையிலும் சதம் என்பதே குதிரை கொம்பாகத் தான் இருக்கும். 

சதம் அடித்தாலே ஹீரோ:

ஏனெனில் 20 ஓவர்கள் மட்டுமே என்பதால், வீரர்களின் விளையாட்டு துல்லியமாக இருக்கும். அரை சதம் அடித்தாலே டி20 தொடரில் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளப்படும். அதையும் தாண்டி சதம் அடித்து விட்டால் அந்த வீரர் தான் அன்றைய நாளின் சிறந்த வீரர். அப்படியிருக்கையில் டி20 போட்டி ஒன்றில் ஒரு வீரர் இரட்டை சதம் அடித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? 

ஆட்லாண்டா ஓபன் லீக்:

ஆம். அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் ஓபன் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அட்லாண்டா பையர் அணியும், ஸ்கொயர் டிரைவ் அணியும் மோதினர். டாஸ் வென்ற அட்லாண்டா அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. 

77 பந்துகளில் 205 ரன்கள்:

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ரஹீம் கான்வெல் மற்றும் ஸ்டீபன் டைலர் ஆகியோர் களமிறங்கினர். தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய ரஹீம் கான்வெல், 77 பந்துகளில் 17 பவுண்டரி, 22 சிக்சர்கள் அடித்து 205 ரன்கள் குவித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். 

புதிய வரலாறு:

இதன் மூலம் அட்லாண்டா அணி 20 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களை குவித்து வரலாறு படைத்தது. இதுவரை எந்தவொரு சர்வதேச வீரரும் டி20 போட்டியில் இரட்டை சதம் அடித்ததாக வரலாறே இல்லாத நிலையில், ரஹீம் கான்வெல் முதன் முதலாக அந்த சாதனையை படைத்துள்ளார். 

சாதனையில் சேராது:

ஆயினும் அட்லாண்டா ஓபன் தொடர் ஐசிசியால் அங்கீகரிக்கப்படாத தொடர் என்பதால், வரலாற்றில் ரஹீம் கான்வெல்லின் பெயர் இடம் பெறாது என்பது தான் ரசிகர்களின் சோகமாக உள்ளது. அந்த சாதனை தற்போது முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ் கெய்லிடம் உள்ளது. 

கிறிஸ் கெயிலுக்கு தான்:

2013-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஒரு போட்டியில் கிறிஸ் கெயில் 175 ரன்கள் எடுத்ததே சாதனையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.