யூரோ கோப்பை கால்பந்து... அடுத்து சுற்றுக்கு முன்னேறிய இங்கிலாந்து, குரேஷியா...

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

யூரோ கோப்பை கால்பந்து... அடுத்து சுற்றுக்கு முன்னேறிய இங்கிலாந்து, குரேஷியா...
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் டி பிரிவு அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் குரோஷியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் இந்த தொடரில் இதுவரை ஒரு வெற்றி கூட பெறாத நிலையில், முதல் வெற்றிக்காக போராடின. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் தலா ஒரு கோல் போட்டனர். பின்னர் இரண்டாம் பாதியில் குரோஷியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிக் கோல் அடித்து, அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். 77ஆவது நிமிடத்தில் அந்த அணியின் இவான் பெரிசிக் மற்றொரு கோல் அடிக்க, முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வெற்றி பெற்றது.
 
இங்கிலாந்தின் வெம்ப்ளி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில், இங்கிலாந்து மற்றும் செக் குடியரசு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கிய 2ஆவது நிமிடத்திலேயே இங்கிலாந்து அணியின் ரஹீம் ஸ்டெர்லிங் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு கோலாகாமல் போனது. ஆனால், அடுத்த 10 நிமிடங்களிலேயே பந்தை தலையால் முட்டி அட்டகாசமாக கோல் போட்டார் ஸ்டெர்லிங். இதனையடுத்து இரு அணி வீரர்களும் கோல் போடாததால், இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் டி பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.