இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து... 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி...

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து... 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி...
இந்தியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இங்கிலாந்தில் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் பிரிஸ்டலில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற கேப்டன் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.  இந்திய அணியில் தொடக்க ஆட்ட வீராங்கனையான மந்தனா மற்றும் ஷெபாலி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் குறைந்த அளவிலான ரன்கள் எடுத்து வெளியேறினர். 
 
அடுத்து வந்த பூனம் சற்று நிலைத்து ஆடி 4 பவுண்டரிகள் விளாசி 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், கேப்டன் மிதாலி ராஜ் அதிரடியாக அடித்து ஆடினார்.  அவர் 41. 1வது ஓவரில் பவுண்டரி விளாசி அரை சதம் கடந்துள்ளார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது.  இங்கிலாந்து அணி வெற்றி பெற 202 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
 
அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியின் வீரரான, லாரன் 16 ரன்களில் வெளியேறினார்.  ஆனால், மற்றொரு தொடக்க ஆட்ட வீராங்கனையான டேமி 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அவரை தொடர்ந்து விளையாட வந்த ஸ்சிவெர் 74 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.  இறுதியில் இங்கிலாந்து அணி 34 புள்ளி 5 ஓவரில்  2 விக்கெட்டுகள் இழப்புக்கு  202 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.