ஐரோப்பிய கால்பந்து போட்டி - ஜெர்மனியிடம் வீழ்ந்தது போர்ச்சுக்கல்

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ஜெர்மனிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், போர்ச்சுக்கல் அணி 4 க்கு 2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.

ஐரோப்பிய கால்பந்து போட்டி - ஜெர்மனியிடம் வீழ்ந்தது போர்ச்சுக்கல்

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, 11 நாடுகளில் நடைபெற்று வருகிறது. ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் போர்ச்சுக்கல் மற்றும் ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் பலமாக மல்லுகட்டியதால் களத்தில் அனல் பறந்தது. 5-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ராபின் கோசென்ஸ் அடித்த கோல் ஆப்-சைடு என அறிவிக்கப்பட்டது.

15-வது நிமிடத்தில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ கோல் அடித்தார். அதன் பிறகு ஜெர்மனி வீரர்கள், எதிரணி கோல் எல்லையை அடிக்கடி முற்றுகையிட்டு மிரள வைத்தனர். போர்ச்சுக்கல் வீரர்கள் ருபென் டயாஸ், ரபெல் குயரீரோ ஆகிய இருவரும் அடுத்தடுத்து சுயகோல் போட்டு அதிர்ச்சி அளித்தனர்.

அதாவது ஜெர்மனியின் கோல் வாய்ப்புகளை கடைசி நேரத்தில் முறியடிக்க முற்பட்ட போது, அவர்களது காலில் பந்து பட்டு வலைக்குள் புகுந்து விட்டது. முடிவில் ஜெர்மனி 4 க்கு 2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கலை துவம்சம் செய்து வெற்றி பெற்றது.