கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - வெற்றி பெற்றது லக்னோ அணி!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அவேஷ் கான், ஹோல்டர் ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சால் 75 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ அணி அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - வெற்றி பெற்றது லக்னோ அணி!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53வது போட்டி, புனேவில் நடைபெற்றது. இதில், லக்னோ - கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, டி காக், தீபக் ஹுடா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டி காக் 50 ரன்களும், தீபக் ஹுடா 41 ரன்களும் விளாசினர்.

இதனையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, லக்னோ வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குறிப்பாக, அவேஷ் கான், ஹோல்டரின் மிரட்டலான பந்துவீச்சில் நிலைகுலைந்த கொல்கத்தா அணி, 14 புள்ளி 3 ஓவரில் 101 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. சிறப்பாக பந்துவீசிய அவேஷ் கான், ஹோல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

இதன்மூலம், 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற லக்னோ அணி, தொடரில் 8வது வெற்றியை பதிவு செய்தது. இதனையடுத்து, புள்ளிகள் பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறி லக்னோ அணி அசத்தியுள்ளது.