இந்தியா - தென்னாப்பிரிக்கா 3ஆவது டெஸ்ட் போட்டி :  இந்திய அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட்!!

கேப்டவுன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா 3ஆவது டெஸ்ட் போட்டி :  இந்திய அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட்!!

இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்திலும், ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2ஆவது டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி கண்டன. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் தொடரை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும், இரு அணிகள் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணி, 77 புள்ளி 3 ஓவரில் 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 79 ரன்களும், புஜாரா 43 ரன்களும் சேர்த்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில், ரபாடா 4 விக்கெட்டுகளையும், யான்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய நிலையில், அந்த அணியின் கேப்டன் எல்கர், 3 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முடிவில் தென்னாப்பிரிக்க அணி 8 ஒவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியை விட 206 ரன்கள் பின்தங்கி உள்ள நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.