22வது காமன்வெல்த் தொடர் நிறைவு : பதக்கப்பட்டியில் 4ம் இடம் பிடித்த இந்தியா!!

இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் தொடர் நிறைவு பெற்றது. 22 தங்கம், 16 வெள்ளிகளுடன் 61 பதக்கங்களை குவித்த இந்தியா, பதக்கப்பட்டியலில் 4ம் இடத்தை பிடித்தது. 

22வது காமன்வெல்த் தொடர் நிறைவு : பதக்கப்பட்டியில் 4ம் இடம் பிடித்த இந்தியா!!

22வது காமன்வெல்த்

22வது காமன்வெல்த் போட்டி, இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் கடந்த மாதம் 28ம் தேதி, கோலாகலமாக தொடங்கியது. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஹாக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உட்பட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 பந்தயங்கள் அரங்கேறியது. புதிதாக, 20 ஓவர் மகளிர் கிரிக்கெட், ஜூடோ ஆகிய போட்டிகள் சேர்க்கப்பட்டன. வழக்கமாக இடம் பெறும் துப்பாக்கி சுடுதல், பலத்த எதிர்ப்பையும் மீறி நீக்கப்பட்டது.

இந்த தொடரில், 72 நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்தியா சார்பில், 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் கண்டனர். 

தங்கம்

துப்பாக்கிச்சுடுதல் போட்டி நீக்கப்பட்டதால், இந்தியா பதக்கப்பட்டியலில் பின்வாங்கும் என கணிக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், லான் பவுல்ஸ், ஜூடோ, தடகள போட்டிகளில் தங்கம் வென்று அசத்தியது. 

மல்யுத்தத்தில் ஆறு தங்கப் பதக்கங்களும், குத்துச்சண்டையில் மூன்று தங்கப் பதக்கங்களும் இந்தியாவிற்கு கிடைத்தன. பேட்மிண்டன் தொடரில் 3 தங்கத்தையும், பளு தூக்குதலில் 3 தங்கத்தையும் இந்தியா உச்சிமுகர்ந்தது.  

4ஆம் இடம்

மொத்தம் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் இந்தியா 4ம் இடத்தை பிடித்தது. 67 தங்கம், 57 வெள்ளி என மொத்தம் 178 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தை பெற்றது. இரண்டாம் இடத்தில் இங்கிலாந்தும், மூன்றாம் இடத்தில் கனடாவும் வகித்தன.

நிறைவு விழா

இந்த நிலையில், காமன்வெல்த் நிறைவு விழா, பர்மிங்ஹாமின் அலெக்சாண்டர் மைதானத்தில் விமரிசையாக நடைபெற்றது. வண்ண வண்ண, வாண வேடிக்கைகள் விண்ணில் மிளிர, இசை, நடன நிகழ்ச்சிகள் களைகட்டின. 

அந்தந்த நாட்டின் வீரர், வீராங்கனைகள் குழுவாக, தங்கள் நாட்டுக்கொடியை ஏந்திச் சென்றனர். இந்திய சார்பில் டேபிள்  டென்னிஸ் வீரர் சரத்கமலும், குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீனும் தேசியக்கொடியை ஏந்தினர். 

அடுத்த போட்டி

2026ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி, ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், பதக்கங்களுடன் தாயகம் திரும்பிய இந்தியவீரர்களுக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.