சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 14 டெஸ்ட் தொடர்களை வென்று இந்தியா சாதனை...

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என இந்தியா வென்றது. 

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 14 டெஸ்ட் தொடர்களை வென்று இந்தியா சாதனை...

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 62  ரன்களில் சுருண்டது. இதையடுத்து நியூசிலாந்துக்கு ‘பாலோ-ஆன்’ வழங்காத இந்திய அணி 263 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. இந்திய அணி 70 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் அடித்து இருந்த போது டிக்ளேர் செய்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 540 - ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், நியூஸிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனால், 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. ஆட்ட நாயகனாக மயாங்க் அகர்வாலும், தொடர் நாயகனாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-0  என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. மேலும், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 14 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனைப் படைத்துள்ளது. அதேபோல் இந்திய டெஸ்ட் அணி விராட் கோலி தலைமையில் ஆதிக்கும் செலுத்தி வருகிறது. 2014-ம் ஆண்டு முதல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக பொறுப்பேற்று 66 போட்டிகளில் அணியை வழி நடத்தியுள்ளார். இதில் 39 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 16 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 11 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.