முதலிடம் பிடித்து இந்திய கிரிக்கெட் அணி சாதனை..! குவியும் வாழ்த்துகள்..!

முதலிடம் பிடித்து இந்திய கிரிக்கெட் அணி சாதனை..! குவியும் வாழ்த்துகள்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ், விராட் கோலி ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா:

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் தொடரில் சமநிலையில் இருந்த நிலையில், இவ்விரு அணிகளும் மோதிய 3வது மற்றும் கடைசி டி-20 போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

ஆஸ்திரேலியா பேட்டிங்:

அதன்படி முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிம் டேவிட் 54 ரன்களும், கிரீன் 52 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அக்ஷர் பட்டேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியா பேட்டிங்:

இதனையடுத்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, கே.எல்.ராகுல் ஒரு ரன்னிலும், கேப்டன் ரோஹித் சர்மா 17 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி - சூர்யகுமார் யாதவ், அதிரடியாக ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக சிக்சரும் பவுண்டரியுமாக பறக்கவிட்ட சூர்யாகுமார் யாதவ், 36 பந்துகளில் 69 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 37 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். 

கடைசி ஓவர்:

கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் சிக்சர் விளாசிய கோலி, அடுத்த பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். 48 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார் கோலி. இறுதியில் ஹர்திக் பாண்டியா பவுண்டரி விளாச, ஒரு பந்து மீதமிருந்த நிலையில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. 

வெற்றி:

ஹர்திக் பாண்டியா 25 ரன்களும், தினேஷ் கார்த்திக் ஒரு ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன்மூலம், 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

சாதனை:

நடப்பு ஆண்டில் இந்திய அணி பெறும் 21வது வெற்றி இதுவாகும். இதன்மூலம், ஒரு ஆண்டில் அதிக  வெற்றிகளை குவித்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன்பாக, கடந்த ஆண்டு பாகிஸ்தான் அணி 20 வெற்றிகளை குவித்ததே சாதனையாக இருந்தது. அதனை தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.