ஐபிஎல் எலிமினேட்டர் போட்டி : 2வது குவாலிபையர் ஆட்டத்துக்கு பெங்களூரு முன்னேற்றம் !!

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை வீழ்த்தி பெங்களூரு அணி 2வது குவாலிபையர் ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டி : 2வது குவாலிபையர் ஆட்டத்துக்கு பெங்களூரு முன்னேற்றம் !!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் புள்ளிகள் பட்டியலில் 3வது மற்றும் 4வது இடத்தைப் பிடித்த லக்னோ - பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, ரஜத் படிதாரின் அதிரடி சதத்தால் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய படிதார் 112 ரன்களும், தினேஷ் கார்த்திக் 37 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இப்போட்டியில் சதம் அடித்தன் மூலம், இந்திய அணியில் அறிமுகம் ஆகாமல் ஐபிஎல் பிளேஆஃப் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரஜத் படிதார் படைத்துள்ளார்.

இதனையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பெங்களூரு அணி, 2வது குவாலிபையர் ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் லக்னோ அணி, தொடரில் இருந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது.

அகமதாபாத்தில் நாளை நடைபெறும் 2-வது குவாலிபையர் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியுடன் பெங்களூரு அணி மோதவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.