அன்றும், இன்றும் எனக்காக எதுவும் மாறவில்லை..காமன்வெல்த் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற வீராங்கனை மீண்டும் குற்றச்சாட்டு..!

வீரர்கள் பயிற்சி எடுக்கக் கூட டெல்லி அரசு எவ்வித உதவியும் செய்து தந்ததில்லை என பகிரங்க சாடல்..!

அன்றும், இன்றும் எனக்காக எதுவும் மாறவில்லை..காமன்வெல்த் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற வீராங்கனை மீண்டும் குற்றச்சாட்டு..!

பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த்தில் மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள வீராங்கனை திவ்யா கக்ரான்,  அன்றும் இன்றும் எதுவும் எனக்காக மாறவில்லை என செய்துள்ள ட்வீட் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

திவ்யா கக்ரான்: டெல்லியை சேர்ந்தவர் திவ்யா கக்ரான். இவர் ஒரு மல்யுத்த வீராங்கனை.  கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் தலைநகரான ஜகர்த்தாவில் நடைபெற்ற 18-வது ஆசியப் போட்டிகளில் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றவர் திவ்யா கக்ரான். 

முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது குற்றச்சாட்டு: இந்த ஆசியப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு அந்தந்த மாநில அரசுகளும், மத்திய அரசும் மாறி மாறி பரிசுத் தொகையை அறிவித்தது. இந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த திவ்யா கக்ரான், அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, இன்று நான் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற எனக்கு எதிர்காலத்தில் அதிக உதவி செய்வதாக கூறினீர்கள், ஆனால் நான் உதவி கேட்ட போது எனக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இப்போது என்னை வாழ்த்தி பரிசுகளை வழங்குகிறீர்கள், ஆனால் எனக்கு உண்மையில் உதவி தேவைப்பட்ட போது நீங்கள் வழங்கவில்லை என டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சரமாரியாக சாடியிருந்தார். 

2022-காமன்வெல்த் போட்டியில் வெண்கலம்: இந்த நிலையில் இங்கிலாந்தில் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் மல்யுத்தத்தின் 68 கிலோ பெண்கள் பிரிவில் டெல்லியை சேர்ந்த திவ்யா கக்ரான் மீண்டும் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 

ப்ளாஷ் பேக்: காமன்வெல்த் போட்டியில் ஒரே நாளில் 3 தங்கம் உட்பட 6 பதக்கங்களை வென்றுள்ள வீரர்களுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள திவ்யா கக்ரான், ” இப்போது நீங்கள் வாழ்த்து கூறியது மகிழ்ச்சி தான், ஆனால் மல்யுத்த வீரர்கள் பயிறி எடுக்கக் கூட டெல்லி அரசு எவ்வித உதவியும் செய்து தந்ததில்லை” எனவும் சாடியுள்ளார். அத்தோடு, கடந்த 2018-ம் ஆண்டு முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது வைத்த குற்றச்சாட்டு வீடியோவை பகிர்ந்து, ”அன்றும், இன்றும் எதுவும் எனக்காக மாறவில்லை” எனவும் ட்வீட்டில் பகிர்ந்துள்ளார் திவ்யா கக்ரான்.