6-வது முறையாக கோப்பையை வென்ற இலங்கை அணி.. வெற்றிக்கு வித்திட்ட வீரர்கள்..!

தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஹசராங்கா..!

6-வது முறையாக கோப்பையை வென்ற இலங்கை அணி.. வெற்றிக்கு வித்திட்ட வீரர்கள்..!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்:

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை 6-வது முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

170 ரன்கள் விளாசிய இலங்கை:

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, துபாயில் நேற்று நடைபெற்றது. இதில், இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, பானுக ராஜபக்சே - ஹசரங்கா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பானுக ராஜபக்சே ஆட்டமிழக்காமல் 71 ரன்களும்,  ஹசரங்கா 36 ரன்களும் விளாசினர்.

பாகிஸ்தான் திணறல்:

இதனையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இலங்கை வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மறுமுனையில் தனியொருவனாக போராடிய ரிஸ்வான் 55 ரன்கள் எடுத்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி, 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

ஹசரங்கா தொடர் நாயகன்:

இதன்மூலம், 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை அணி, 6வது முறையாக ஆசிய கோப்பையை வென்று அசத்தியுள்ளது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் 71 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட பானுக ராஜபக்சே ஆட்டநாயகனாகவும், இப்போட்டியில் எடுத்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹசராங்கா தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.