இன்று நிறைவுபெறுகிறது டோக்கியோ பாராலிம்பிக் போட்டி: பதக்க பட்டியலில் இந்தியா முன்னேற்றம்....

டோக்கியோ பாராலிம்பிக்கின் இறுதி நாளான இன்று, இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி கிடைத்துள்ளது. 

இன்று நிறைவுபெறுகிறது டோக்கியோ பாராலிம்பிக் போட்டி: பதக்க பட்டியலில் இந்தியா முன்னேற்றம்....

பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், கடந்த 24ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், டோக்கியோ பாராலிம்பிக்கின் கடைசி நாளான இன்று, பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் SH6 பிரிவு போட்டியில், இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்று சாதனை படைத்தார். ஹாங்காங் வீரர் சூ மான் காயை வீழ்த்தி, நடப்பு பாராலிம்பிகில் இந்தியாவுக்கு 5ஆவது தங்கப்பதக்கத்தை கிருஷ்ணா வென்று கொடுத்தார். 

இதன்காரணமாக, பதக்கப்பட்டியலில் 24ஆவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. முன்னதாக பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் SL4 பிரிவில், நொய்டா துணை வட்டாட்சியர் சுகாஸ் யத்திராஜ் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். தங்கப்பதக்கத்திற்கான போட்டியில், பிரான்ஸ் வீரர் லூகாஸ் மசூரை எதிர்கொண்ட யத்திராஜ், தோல்வியை தழுவி வெள்ளிப்பதக்கத்தை பெற்றார். 

இதுவரை இல்லாத அளவிற்கு, நடப்பு பாராலிம்பிக்கில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை அள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் கோலாகல நிறைவு விழாவில், இந்தியாவிற்காக 2 பதக்கங்களை வென்ற இளம் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா, இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ளார்.