ஃபெடரர் மற்றும் நடாலை முந்துவாரா ஜோகோவிச்? கோல்டன் கிராண்ட்ஸ்லாம் வெல்லும் வாய்ப்பு யாருக்கு?

அமெரிக்க ஓபன் தொடரில் பட்டம் வென்று, ’அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுக்குச் சொந்தக்காரர்’ என்ற சாதனையை ஜோகோவிச் படைப்பாரா? என்ற ஆவல் டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஃபெடரர் மற்றும் நடாலை முந்துவாரா ஜோகோவிச்? கோல்டன் கிராண்ட்ஸ்லாம் வெல்லும் வாய்ப்பு யாருக்கு?

டென்னிஸ் வரலாற்றில் பெரும் மதிப்பு மிக்கதாக கருதப்படும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள், ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகின்றன. இதில், டென்னிஸ் உலகின் ஜாம்பவான்களான ரோஜர் ஃபெடரர் மற்றும் ரஃபேல் நடால் ஆகியோர், தலா 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், நடப்பாண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் என, இதுவரை முடிந்துள்ள 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் தனதாக்கிய ஜோகோவிச், ஃபெடரர் மற்றும் நடாலின் சாதனையை சமன் செய்துள்ளார். இந்த நிலையில், அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று, டென்னிஸ் அரங்கில் இதுவரை யாரும் அடையாத உயரத்தை ஜோகோவிச் தொடுவாரா என்ற ஆவல் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,  நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கும், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், இரண்டாம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். இதில் வாகை சூடும் பட்சத்தில், 21 பட்டங்களுடன் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனையை ஜோகோவிச் படைப்பார். அதேசமயம் மெட்வதேவும் கடும் சவால் அளிப்பார் என்பதால், இப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும், ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைவெல்லும், ’கோல்டன் கிராண்ட்ஸ்லாம்’ வாய்ப்பும் ஜோகோவிச்சுக்கு அமைந்துள்ளது. நீண்ட நெடிய டென்னிஸ் வரலாற்றில், கடந்த 1988ஆம் ஆண்டு ஜெர்மனி வீராங்கனை ’ஸ்டெஃபி கிராஃப்’ மட்டுமே இந்த அரிய சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.