14வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா?  இன்று கூடும் பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவு...

14வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா?  இன்று கூடும் பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவு...

இந்த ஆண்டு கைவிடப்பட்ட மீதமுள்ள ஐ.பி. எல். போட்டியின் அதிகாரபூர்வ தேதி  இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

 
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தலைமை தாங்கும் இந்த கூட்டத்தில், இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

 இந்தியாவில் நடந்து வந்த 14-வது ஐ.பி. எல். கிரிக்கெட் போட்டி தொடரில் மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் மீறி 4 அணியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த 4-ந்தேதி இந்த போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் எஞ்சிய ஐ.பி. எல். போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் வருகிற செப்டம்பர் 18-ந்தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.இந்த நிலையில் ஐ.பி. எல். போட்டியின் அதிகாரபூர்வ தேதி குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படுகிறது.

ஐ.பி. எல். மீண்டும் தொடங்கும் போது அதில் இங்கிலாந்து வீரர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருக்கும் நிலையில் இங்கிலாந்து உள்பட வெளிநாட்டு வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கும் விஷயத்தில் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையம் பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் டி20 உலகக்கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்த முடியுமா அல்லது அதனையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.