சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் முதன் முறையாக பட்டம் வென்ற இளம் வீராங்கனை..!

2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போட்டியை கண்டு ரசித்த முதலமைச்சர்..!

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் முதன் முறையாக பட்டம் வென்ற இளம் வீராங்கனை..!

சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ்:

சென்னையில் முதல்முறையாக சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் தொடர், நுங்கம்பாக்கம் டென்னிஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்தது. இதன் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், செக்குடியரசின் 17வயது இளம் வீராங்கனை லிண்டா ஃப்ரூவிர்டோவா - போலந்தின் மக்டா லினெட்டுடன் மோதினார். இப்போட்டியில் முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்த லிண்டா, பின்னர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-3, 6-3 என்ற கணக்கில் அடுத்த இரு செட்களையும் கைப்பற்றினார். 

போட்டியை கண்டு ரசித்த முதலமைச்சர்:

இதன் மூலம், 4-6,  6-3, 6-3 என்ற செட்கணக்கில் லினெட்டை வீழ்த்தி லிண்டா சாம்பியன் பட்டம் வென்றார்.  WTA சாம்பியன் பட்டத்தை லிண்டா வெல்வது இதுவே முதல்முறையாகும். மேலும், அறிமுக சென்னை ஓபன் தொடரில் மகுடம் சூடிய முதல் வீராங்கனை என்ற பெருமையையும் லிண்டா பெற்றார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இறுதிப் போட்டியை ரசிகர்களோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கண்டு ரசித்தார்.

இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டி:

முன்னதாக நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில், கனடாவின் தாப்ரோஸ்கி, பிரேசிலின் ஸ்டெஃபானி இணை, 6-1, 6-2 என்ற நேர் செட்கணக்கில் ரஷ்யாவின் அன்னா லின்கோவா, ஜார்ஜியாவின் நடிலா ஜலாமிட்சை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

கேடயம்:

நிறைவு நிகழ்ச்சியில், ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற லிண்டாவுக்கும், 2ம் இடம்பிடித்த லினெட்டுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அமைச்சர் கே.என்.நேரு காசோலைகளை வழங்கினார்.

காசோலை வழங்கல்:

இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இணைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கேடயம் வழங்க, திமுக எம்பி ஆ.ராசா காசோலை வழங்கினார். 2வது இடம் பிடித்த இணைக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேடயம் வழங்க, தூத்துக்குடி எம்பி கனிமொழி காசோலை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.