இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி  : வெற்றிக் கணக்கை துவக்குமா இந்திய அணி!!

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி  : வெற்றிக் கணக்கை துவக்குமா இந்திய அணி!!

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வீரர்கள் அதை தவற விட்டுவிட்டனர். முதல் டெஸ்டில் வெற்றிபெற்ற இந்திய அணி அதற்கு அடுத்த 2 டெஸ்டில் தோல்வியை தழுவி ஏமாற்றத்தை அளித்தது. 

இந்நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் உள்ள பார்ல் நகரில் இன்று நடைபெறுகிறது. இரு அணிகளும் இன்று மோதுவது 85-வது ஒருநாள் போட்டியாகும்.

இதுவரை நடந்த 84 ஆட்டத்தில் இந்தியா 35-ல், தென் ஆப்பிரிக்கா 46 -ல் வெற்றிபெற்றுள்ளன. 3 போட்டிகள் முடிவு இல்லை. லோகேஷ் ராகுல் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.