செஸ் ஒலிம்பியாட்டில் தீயாய் பறக்கும் மகளிர் அணி..! இன்றைய ஆட்டம் யாருடன்?

அஜர்பைஜானை தோற்கடிக்க ஆக்ரோஷமாக களமிறங்குமா மகளிர் அணி?

செஸ் ஒலிம்பியாட்டில் தீயாய் பறக்கும் மகளிர் அணி..! இன்றைய ஆட்டம் யாருடன்?

செஸ் ஒலிம்பியாட்டின் 7ஆம் சுற்று ஆட்டங்களில், அஜர்பைஜான், கிரீஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுடன் இந்திய மகளிர் அணிகள் மோதுகின்றன.

மகளிர் பிரிவில், இன்றைய 7ஆம் சுற்று ஆட்டத்தில் இந்திய ஏ அணி, அஜர்பைஜானை எதிர்கொள்கிறது. அபிஜித் தலைமையிலான இந்த அணியில் கோனேரு ஹம்பி, ஹரிகா துரோனவல்லி, வைஷாலி, டானியா சச்தேவ், குல்கர்னி பக்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இப்போட்டியில் இந்தியாவின் கோனேரு ஹம்பி, அஜர்பைஜானின் மமாத்ஸாடா குனேய் உடனும், ஹரிகா துரோணவல்லி - பலஜெய்வா கானிம் உடனும் மோதவுள்ளனர். வைஷாலி - பேதுலையேவா கோவ்ஹரையும், டான்யா சச்தேவ் - ஃபெட்டாலியேவா உல்வியாவையும் எதிர்கொள்கின்றனர்.

இந்திய பி அணியில், வந்திகா அகர்வால், சவுமியா சுவாமிநாதன், கோம்ஸ் மேரி ஆன், திவ்யா தேஷ்முக், பத்மினி ரவுத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தோபாடே ஸ்வப்னில், கேப்டன் பதவி வகிக்கும் இந்த அணி இன்று கிரீஸ் நாட்டுடன் மோதுகிறது.

இதில் இந்தியாவின் வந்திகா அகர்வால் - கிரீசின் சோலகிடுவோ ஸ்டாவ்ரவ்லா உடனும், சவுமியா சுவாமிநாதன் - அவ்ரமிடுவோ அனஸ்டாசியா உடனும் மோதுகின்றனர். கோம்ஸ் மேரி ஆன் - பவ்லிடுவோ எகடெரினியையும், திவ்யா தேஷ்முக் - மார்கன்டனோகி ஹரிடோமேனியையும் எதிர்கொள்கின்றனர்.

சுவிட்சர்லாந்துடன் மோதும் இந்திய சி அணியில், ஈஷா கரவாடே, நந்திதா, ப்ரத்யுஷா போட்டா, விஷ்வா வஸ்னவாலா, சஹிதி வர்ஷினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியின் கேப்டனாக திபயேந்து பருவா செயல்படுகிறார்.

இப்போட்டியில் இந்தியாவின் ஈஷா காரவாடே - சுவிட்சர்லாந்தின் கியார்கெஸ்கு லீனா உடனும், நந்திதா - ஹகிமிஃபர்டு குண்டுலா உடனும் மோதவுள்ளனர். ப்ரத்யுஷா போட்டா - ஹெய்னட்ஸ் குண்டுலுவையும், விஷ்வா வஸ்னவாலா - ஸ்டோரி லாராவையும் எதிர்கொள்ள உள்ளனர்.