யூரோ கோப்பை; இன்று தொடங்குகிறது காலிறுதிப் போட்டிகள்..! 

யூரோ கோப்பை; இன்று தொடங்குகிறது காலிறுதிப் போட்டிகள்..! 

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டிகள் இன்று தொடங்க உள்ள நிலையில், முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து தொடர், கடந்த 11-ம் தேதி தொடங்கியது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டி, ஐரோப்பாவில் உள்ள 11 நகரங்களில் நடைபெற்றது. லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், டென்மார்க், இத்தாலி, செக் குடியரசு பெல்ஜியம், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து இங்கிலாந்து, உக்ரைன் ஆகிய 8 நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. 

இந்நிலையில் 2 நாள் ஓய்வுக்குப் பிறகு, இன்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்க உள்ளன. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 9. 30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஜெர்மனியின் முனிச் நகரில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது காலிறுதி போட்டியில், பெல்ஜியம் மற்றும் இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இரு அணிகளும் சம பலம் பொருந்தியவை என்பதால், இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.