விளையாட தயாராகும் குஜராத்!

விளையாட தயாராகும் குஜராத்!

குஜராத்தில் 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 வரை நடைபெறும் என முதலமைச்சர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு 35வது தேசிய விளையாட்டு போட்டிகள் கேரளாவில் நடைபெற்றது.  கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த ஏழு ஆண்டுகளாக போட்டிகள் நடைபெறாமலிருந்த நிலையில் தற்போது குஜராத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.


உலகத்தரத்தில் குஜராத்தில் போட்டி: 


செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 வரை குஜராத் தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் குஜராத்தின் முன்மொழிவை விரைவாக ஏற்றுக்கொண்டதற்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு நன்றி கூறுவதாகவும் குஜராத் முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், குஜராத் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளதாகவும், குஜராத் மக்களிடையே விளையாட்டு மீதான புது உற்சாகம் காணப்படுவதாகவும் கூறினார். இன்றுவரை எந்த மாநிலமும் நடத்திராத வகையில் மிகவும்  சிறப்பான முறையில்  தேசிய விளையாட்டுகளை நடத்த குஜராத் மாநிலம் திட்டமிட்டுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்தியா விளையாட்டின் முன்மாதிரி மாநிலம்: 


இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ய குஜராத் தயாராக இருப்பது குறித்து மகிழ்ச்சியளிப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.  இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் என்எஸ்எஃப் உடன் கலந்தாலோசித்து மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மதிப்பீடு செய்யப்பட்டதாக கூறினார். அதன்படி, விளையாட்டு நடத்தப்படுவது குறித்து இறுதி முடிவு செய்யப்பட்டதாகவும், தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான மாநில அரசின் முனைப்பான அணுகுமுறை பாராட்டும் விதமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.  


குஜராத்தில் நடைபெற உள்ள தேசிய விளையாட்டு போட்டிகளில், தடகளம், ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து, ஜூடோ, கபடி, கோ-கோ போன்ற 34 பிரிவுகளில் 7,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்றும் செய்தி வெளியகியுள்ளது.