அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்கிய 16-வது சீசன் ஐபிஎல் கிாிக்கெட் முதல் போட்டியில் சென்னை சூப்பா் கிங்சை வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, 2008-ல் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.
முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் ருதுராஜ் கெய்குவாட் அதிகபட்சமாக 92 ரன்கள் குவித்தார்.
இதனை தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் விருதிமென் சஹா 25 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 63 ரன்கள் குவித்தார். இறுதியில் 19.2 ஓவரில் குஜராத் அணி 5 விக்கெட் இழந்து 182 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.