மெஸ்ஸியின் அபார ஃப்ரீ கிக் கோல்..அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜெண்டினா அணி.! 

மெஸ்ஸியின் அபார ஃப்ரீ கிக் கோல்..அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜெண்டினா அணி.! 

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா மற்றும் கொலம்பியா அணிகள் அரையிறுக்கு தகுதி பெற்றுள்ளன.

47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி, பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகிறது. நான்காவது காலிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா மற்றும் ஈகுவேடார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜெண்டினா அணி, 40 மற்றும் 84-வது நிமிடத்தில் கோல் அடித்தது. மேலும், அதன்பின் அந்த அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதனை சாதகமாக்கி கொண்ட அவர், ஈகுவேடார் அணியின் தடுப்பு சுவரையும் தாண்டி லாவகமாக கோல் அடித்தார். 

இதன் மூலம் சர்வதேச போட்டியில் 76 கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார். அதோடு பிரேசில் ஜாம்பவான் பீலேவின் கோல்களை சமன் செய்ய அவருக்கு ஒரு கோல் தேவைப்படுகிறது. பதில் கோல் அடிக்க கடைசி வரை போராடியும் ஈகுவேடார் அணி வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜெண்டினா, அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

முன்னதாக நடைபெற்ற காலிறுதி போட்டியில், உருகுவே மற்றும் கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இறுதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் எடுக்காதததால், ஆட்டம் சமனில் முடிய, கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போதும், இதே நிலை நீடித்ததால், முடிவை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 4 - 2 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தி, கொலம்பியா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.