செஸ் உலகக்கோப்பை போட்டியில் வெள்ளி வென்று தாயகம் திரும்பிய தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அஜர்பைஜான் நாட்டில் உள்ள பெக்கு நகரில் செஸ் உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரும் நார்வே நாட்டைச் சேர்ந்தவருமான மேக்னஸ் கார்ல்சனுடன் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினார்.
இருவருக்கும் இடையிலான இறுதிப்போட்டியின் இரண்டு சுற்றுப் போட்டிகளும் டிரா ஆன நிலையில், சாம்பியனை தீர்மானிக்கும் டைபிரேக்கர் சுற்று நடைபெற்றது. இதில் கார்ல்சன் வெற்றி பெறவே உலக செஸ் இறுதிப்போட்டியில் நுழைந்த இளம் வீரர் என்ற பெருமையுடன் பிரக்ஞானந்தா தோல்வியைத் தழுவினார்.
தொடர்ந்து பெரும் வரவேற்புக்கு மத்தியில் அவர் இன்று தாயகம் திரும்பினார். அப்போது பிரக்ஞானந்தாவுக்கு மலர்தூவி, சால்வை மற்றும் கிரீடம் அணிவித்து தமிழ்நாடு அரசு சார்பில் கோலாகலமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களுடன் அவர் வரவேற்கப்பட்டார். தொடர்ந்து பார்வையாளர்களிடம் இருந்து தேசியக் கொடியைப் பெற்றுக் கொண்ட பிரக்ஞானந்தா, அனைவரின் அன்புக்கும் நன்றி கூறியுள்ளார்