10 சதவீதம் இட ஒதுக்கீடு - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி என்ன சொல்கிறார்..?

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார் .
10% இட ஒதுக்கீடு:
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசன சட்டத் திருத்தம் செல்லும் என உச்ச நீதிமன்ற அமர்வு நவம்பர் 7 ஆம் தேதி தீர்ப்பளித்தது.
103 ஆவது அரசியல் சாசன திருத்தம்:
கடந்த 2019 இல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சட்டத் திருத்தம் 103 ஆவது அரசியல் சாசன திருத்தம் என்றழைக்கப்படுகிறது. இந்த சட்டத் திருதத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 40 வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித், செப்டம்பர் 27இல் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
இதையும் படிக்க: 10% இட ஒதுக்கீடுக்கான தீர்ப்பு...ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
3:2 தீர்ப்பு:
நவம்பர் 7 ஆம் தேதி 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி. பர்திவாலா ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசன அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்றும் நீதிபதிகள் யு.யு லலித், ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளனர். ஆகவே 3:2 என்ற விகிதத்தில் வெளியாகியுள்ள இந்த தீர்ப்பின் மூலம், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுத்த 103ஆவது அரசியல் சாசன திருத்தச் சட்டம் செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் அறிக்கை:
இந்த தீர்ப்புக்கு பல்வேறு ஆதாரவுகளும் எதிர்ப்புகளும் எழுந்தவண்ணம் உள்ளது. "இந்த வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும், இது குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோத்த பின்னர் அடுத்த கட்ட போரட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கபப்படும் என கூறியிருந்தார்.
அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதம்:
சென்னை தலைமைச் செயலகத்தில், அரசு சட்டக் கல்லூரிகளில் முதுநிலை சட்டப்படிப்பில் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மீது மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா என்பது குறித்து, அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், 10% இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற மக்கள் கருத்தை திமுக தொடர்ந்து வலியுறுத்தும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.