சங்கராபுரம் அருகே கனமழையால் சேதமான 10ஆயிரம் நெல் மூட்டைகள்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கனமழை காரணமாக, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து முற்றிலும் சேதமானதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

சங்கராபுரம் அருகே கனமழையால் சேதமான 10ஆயிரம் நெல் மூட்டைகள்...

சங்கராபுரம் அருகேயுள்ள தேவபாண்டலம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.  சுற்றுவட்டாரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த நெல் கொள்முதல் நிலையத்தில், தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்வதற்காக வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நெல் கொள்முதல் செய்யப்படாமல் டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனிடையே நெல் கொள்முதல் நிலையத்தில் மேற்கூரை இல்லாததால், அனைத்து நெல் மூட்டைகளும் திறந்த வெளியிலேயே தார்பாய்களால் மூடி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக வெளியே வைக்கப்பட்டு இருந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் நனைந்து சேதமானதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

இதனால், தமிழக அரசு தங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ள விவசாயிகள், நெல் கொள்முதல் நிலையத்திற்கு மேற்கூரை அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.