கலைஞர் கருணாநிதியின் 16 அடி சிலை; துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்!

சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞரின் முழு உருவச்சிலை திறக்கப்பட்டது.

கலைஞர் கருணாநிதியின் 16 அடி சிலை; துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்!

தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞருக்கு முழுஉருவ சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 26ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீர கலைஞரின் கலைமிகு சிலை நிறுவும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. தற்போது சிலை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கலைஞர் சிலை 14 அடி உயர பீடம் அமைக்கப்பட்டு, 16 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. வெண்கலத்தில் ஆன கலைஞர் சிலை 2 டன் எடை கொண்டது. சிலை வைக்கும் இடத்தை சுற்றி சுமார் 5,300 சதுர அடியில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதுடன், அழகிய பூங்கா, வண்ண விளக்குகள் உள்ளிட்ட அழகிய வேலைபாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கலைஞர் சிலை அமைக்கும் இறுதிக்கட்ட பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு நேரில் சென்று பார்த்தார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு ஆகியோரும் உடன் இருந்தனர். கலைஞர் சிலை அமைந்துள்ள இடத்தை பார்வையிட்ட முதல்வர், கூடுதலாக என்ன செய்ய வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். இந்நிலையில் சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞரின் முழு உருவச்சிலை திறக்கப்பட்டது. கலைஞரின் முழு உருவச்சிலையை குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

முதலமைச்சராக 5 முறை பதவி வகித்த கலைஞருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. 16 அடி உயரமுள்ள வெண்கல சிலையின் கீழ் அமைந்துள்ள 14 அடி உயர பீடத்தில், கலைஞரின் 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி வருகையொட்டி சென்னை அண்ணாசாலை மற்றும் விழா நடைபெறும் ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.