கோவிலுக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு....மக்கள் அதிருப்தி!

கோவிலுக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு....மக்கள் அதிருப்தி!

திருவண்ணாமலை மாவட்டத்தில்  கோயிலுக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலங்கள் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் , அடிப்படை வசதிகள் மேற்கொள்ள முடியாமல் கோயில் நிர்வாகத்தினர் தவித்து வருகின்றனர்.

பச்சையம்மன் சமேத மன்னார்சுவாமி திருக்கோவில்:  

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்துள்ள காம்பட்டு கிராமத்தில் அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னார்சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோயிலை குலதெய்வமாக வணங்கக்கூடியவர்கள்  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், வெளிமாநிலங்களிலும் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வந்து பொங்கலிட்டு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். 

கோயில்கள் ஆக்கிரமிப்பு:

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள, இந்தக் கோயிலுக்கு சொந்தமான 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 ஏக்கர் நிலம் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.  

சிரமத்துக்குள்ளாகும் பக்தர்கள்: 

இதனால் தங்களின் நேர்த்திக்கடன்களை பூர்த்தி செய்ய வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கும், பொங்கல் வைப்பதற்கும் , முடி காணிக்கை செய்யவும் இடம்  இல்லாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் கழிவறை மற்றும் குளியலறையும் இல்லாமல் பெண் பக்தர்கள் மிகவும் சிரமத்துடன் வழிபட்டுச் செல்கின்றனர். 

ஆக்கிரமிப்பு நிலங்களை விட்டுதராத தனிநபர்கள்:

இந்நிலையில் காம்பட்டு ஊராட்சி மன்றத்தின் மூலம் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றியும் இதுநாள் வரை தனி நபர்கள் நிலத்தை விட்டுத்தராமல் கோவில் நிலத்தை அனுபவித்து வருகின்றனர்.

பக்தர்கள் அதிருப்தி:

இதனிடையே, இந்து சமய அறநிலையத் துறை பொங்கல் வைத்து கிடா வெட்டுவதற்கு 100 ரூபாயும், பொங்கல் வைத்து சாமிக்கு அபிஷேகம் செய்ய 125 ரூபாயும் என மொத்தமாக 225 ரூபாய் வசூல் செய்வது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.