சரியா 12 வருடம் கழித்து வெளியான தீர்ப்பு...27 ஆண்டுகள்...நீதிபதி உத்தரவு!

சரியா 12 வருடம் கழித்து வெளியான தீர்ப்பு...27 ஆண்டுகள்...நீதிபதி உத்தரவு!

பாசி டிரேடிங் நிதி நிறுவனம் மூலம் 930 கோடி மோசடி செய்த வழக்கில் இருவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், 171 கோடி ரூபாய் அபராதமும் விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாசி டிரேடிங் நிதி நிறுவனம்:

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு கடந்த 2011ல் பாசி டிரேடிங் என்ற ஆன்லைன் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறியதை நம்பி, ஏராளமான முதலீட்டாளர்கள் பணம் முதலீடு செய்தனர். ஆனால், முறையாக வட்டி தராமல் பொதுமக்களிடம் இருந்து 930 கோடிரூபாய் மோசடி செய்து ஏமாற்றியது.

புகார்:

இது தொடர்பாக புகார் எழுந்ததையடுத்து, அந்த நிறுவனத்தின் இயக்குநர் மோகன்ராஜ், அவரது தந்தை கதிரவன் மற்றும் பங்குதாரர் கமலவள்ளி ஆகியோரை சி.பி.ஐ போலீசார் கைது செய்தனர். தமிழ்நாட்டில் அதிகப்படியான நபர்களிடம் மோசடி செய்யப்பட்ட இந்த வழக்கு, அப்போது தமிழ்நாட்டையே உலுக்கியது.

மேலும் படிக்க: https://malaimurasu.com/posts/cover-story/Transfer-of-Gratuity-Case-to-3-Judge-Bench

மனு தாக்கல்:

இந்த மோசடி தொடர்பாக கோவையில் உள்ள தமிழக முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) வழக்கு நடந்து வந்தது. கடந்த 2013ம் ஆண்டில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 9 ஆண்டுகள் சாட்சி விசாரணை நடந்து வந்த நிலையில், அரசு மற்றும் எதிர் தரப்பு சாட்சியம், இருதரப்பு வாதம் முடிவடைந்தது. இதனிடையே முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க உள்ளதால், தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அந்நிறுவன உரிமையாளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இன்று விசாரணை:

இந்நிலையில் இந்த வழக்கானது நீதிபதி ரவி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். கதிரவன் உயிரிழந்து விட்ட நிலையில் மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அந்நிறுவனத்தின் உரிமையாளர் மோகன்ராஜ் மற்றும் பங்குதாரர் கமலவள்ளி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்

27 ஆண்டுகள் சிறை தண்டனை:

அப்போது முதலீட்டாளர்களுக்கு ஒராண்டிற்குள் பணத்தை வட்டியுடன் திரும்ப தருவதாக மோகன்ராஜ் நீதிபதியிடம் தெரிவித்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதி ரவி, இருவருக்கும் 27 ஆண்டுகள் சிறைதண்டனையும், 171 கோடியே 74 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாசி நிதி நிறுவன வழக்கை முறையாக விசாரிக்காத சிபிஐ போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்ட 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பணத்தை திரும்ப பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார். சரியாக 12 வருடங்கள் கழித்து வழங்கப்பட்ட இந்த தீர்ப்பில் இருவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மோகன்ராஜின் தந்தை கதிரவன் சென்ற ஆண்டு கொரோனா காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.