சென்னையில் விரைவில் 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்

கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள சென்னையில் புதிதாக மூன்று ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் விரைவில் 3  ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்

கொரோனா இரண்டாம் அலை பாதிப்பில் இருந்து சென்னை மாநகராட்சி மீண்டு வருகிறது, சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 1500 நபர்கள் மட்டுமே சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரண்டாம் அலை பாதிப்பு உச்சமாக இருந்த ஏப்ரல், மே மாதங்களில் ஆக்சிஜன் தட்டுபாடு காரணமாக ஏராளமான கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை குறித்து  மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை பணிகளை சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தற்போதே தொடங்கியுள்ளன.  குறிப்பாக, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கைகள் உருவாக்கும் பணிகளும், புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முதற்கட்டமாக சென்னை தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில் நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான இந்த உற்பத்தி நிலையத்தில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னையில் மணலி மற்றும் ஈஞ்சம்பாக்கத்திலும் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும்  பணிகளும் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது