ஆலங்குளத்தில் தீயணைப்பு நிலையத்திற்கு 3.75 கோடி...! முதலமைச்சர் அறிவிப்பு...!!

ஆலங்குளத்தில் தீயணைப்பு  நிலையத்திற்கு 3.75 கோடி...! முதலமைச்சர் அறிவிப்பு...!!

ஆலங்குளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு 3.75 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது ஆலங்குளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு சொந்தம் கட்டிடம் கட்ட அரசு முன்வருமா என்ற ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆலங்குளத்திற்கென குத்தப்பஞ்சம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலம் தேர்வு செய்யப்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து 3.75 கோடி  மதிப்பீட்டளவிலான திட்டம் தயார் செய்யப்பட்டு நிரந்தர கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன், ஆலங்குளம் பகுதியில் உள்ள கடையத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் அவ்வப்போது காட்டுத்தீ ஏற்படுகிறது. வனவிலங்குகளால் ஆபத்து மற்றும் தீ விபத்து போன்றவை ஏற்பட்டால் 20 கி.மீ தொலைவில் தீயணைப்பு வாகனங்கள் விரைய வேண்டிள்ளது. எனவே கடையத்தில் தனியாக தீயணைப்பு நிலையத்திற்கு கட்டிடமும், அலுவலர் குடியிருப்பும் கட்ட அரசு முன்வருமா என்ற கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தீ விபத்து ஏற்படும் இடங்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்த அரசு, அறிவியல் பூர்வமாக ஜி.பி.எஸ் வரைபடங்களின் உதவியுடன் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களில் அமைவிடங்களில் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஓரிடத்தில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்கள் தொடங்க, 25 கிலோ மீட்டர் சுற்றளவில் வேறு ஒரு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் இருந்தால் தவிர்க்க வேண்டும் என்ற சில வரையறைகள் உள்ளது என்றும் கூறினார்.

மேலும், கடையத்தை பொருத்தவரை 18 கி.மீ தொலைவில் உள்ள அம்பாசமுத்திரத்திலும்,  20 கி.மீ. தொலைவில் தென்காசியிலும் முழு அளவில் பணியாளர்களைக் கொண்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர். கடையம் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் 59 சிறிய வகையிலான தீ விபத்துகள் தான் ஏற்பட்டுள்ளது என்றும், விபத்து ஏற்பட்டால் அம்பாசமுத்திரம் மற்றும் தென்காசியில் இருந்து கடையம் பகுதிக்கு விரைந்து சென்று தீயணைப்பு பணிகள் மேற்கொள்ள உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதிலளித்தார்.

முன்னதாக சட்டப்பிரிவில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள e-book முறையின்படி, முதலமைச்சர் பேசிய பதில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு முன் உள்ள தொடுதிரை கணினியில் முதன்முறையாக காட்டப்பட்டது.